டெல்டா மாவட்டங்களில் புதிய ரயில் பாதைத் திட்டப் பணிகள் குறித்து ரயில்வே நிலைக் குழுத் தலைவரும், திமுக மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - திருக்குவளை - நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி - பட்டுக்கோட்டை - காரைக்குடி, மன்னார்குடி பட்டுக்கோட்டை, தஞ்சை - ஒரத்தநாடு பட்டுக்கோட்டை ஆகிய புதிய ரயில் பாதைகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டார். அப்போது, அவரிடம் தங்கள் கிராமத்தின் நடுவே அமைக்கப்படவிருக்கும் ரயில் வழித்தடப் பணிகளால் நூற்றுக்கணக்கான தனியார் கட்டடங்களும், பொதுச் சொதுக்களும் சேதம் அடையும் என்பதால், மாற்று வழியில் இத்திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தென்னமநாடு பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் வலியுறுத்தினர்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பாலு, அங்கிருந்த ரயில்வே அலுவலர்களை உடனடியாக தென்னமநாடு பகுதிக்குச் சென்று, ரயில் திட்டத்தின் உத்தேச வரைவை மாற்றுவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியுமா என்பதை அந்த கிராம மக்களிடம் கலந்துபேசி, முடிவு எடுக்கக் கேட்டுக் கொண்டார்.
இதன்படி, அலுவலர்களும் - கிராம மக்களும் கலந்து பேசி சரியான வழித் தடத்தைத் தேர்ந்தெடுத்தனர்.
இதேபோல பட்டுக்கோட்டை அருகில் உள்ள கிறிஸ்துவ ஆலயம் அகற்றப்படாமலிருக்க ரயில்வே துறையின் திட்ட வரைபடத்தை உருவாக்க வேண்டும் என போதகர் ஜேக்கப் செல்வராஜ் அடிகளார் தலைமையில் கிறிஸ்துவர்கள் கோரிக்கை வைத்தனர். அதை பரிசீலித்து, உரிய முடிவு மேற்கொள்வதாக ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment