Saturday, 30 March 2013

Tamilnadu colleges open date ?




அரசு கல்லூரிகள் ஏப்ரல் 1-ந்தேதி திறக்க வாய்ப்பு இல்லாததால் செமஸ்டர் தேர்வுகள் மேலும் தள்ளிப்போகிறது.
இலங்கை பிரச்சினையை முன்னிறுத்தி கல்லூரி மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். அரசு கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி தனியார் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அனைத்து கல்லூரிகளும் 18-ந்தேதி முதல் காலவரையின்றி மூடப்பட்டன.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 21-ந்தேதி இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா உள்ளிட்ட 25 நாடுகள் ஆதரித்ததால் வெற்றி பெற்றது.
இதனால் மாணவர்கள் போராட்டம் தணியும், அதனைத் தொடர்ந்து கல்லூரிகளும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஏப்ரல் 1-ந்தேதி அனைத்து கல்லூரிகளும் திறக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது. அதற்கான அறிவிப்பை அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் 1-ந்தேதி கல்லூரிகள் திறப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களை போராட்டத்தை கைவிட்டு கல்லூரிகளுக்கு திரும்ப வேண்டும் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் கலை மற்றும் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் தொடர்ந்து மூடப்பட்டு இருப்பதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கல்லூரிகளுக்கு திரும்ப வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள். 1-ந்தேதி முதல் தனியார் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. ஏற்கனவே தனியார் நிகர்நிலை பல்கலக்கழகங்கள் திறக்கப்பட்டு விட்டன. பெரும்பாலான தனியார் கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகள் திங்கட்கிழமை திறக்கப்படும் என்று தெரிகிறது.
ஆனால் அரசு கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்த வாரத்திற்குள் கல்லூரிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment