
தனி ஈழம் கோரிக்கையை இந்தியாவால் செயல்படுத்த முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
இலங்கைத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தும் தமிழக மாணவர்கள், தங்களது எதிர்கால நலன் கருதி போராட்டத்தைக் கைவிட்டு கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.
இலங்கைத் தமிழர்களுக்கு எந்த வகையில் உதவ முடியுமோ, அந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சி உதவியுள்ளது. ஆனால், இலங்கைத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் கட்சி அமைதியாக இருப்பதாக சிலர் பிரசாரம் செய்கின்றனர். தடை செய்யப்பட்ட இயக்கங்களில் இருந்து ஒரு சில ஊடகங்களுக்கு பண உதவி கிடைப்பதால், அவர்கள் இலங்கைத் தமிழர் பிரச்னையை பூதாகரமாக வெளியிடுகின்றனர்.
தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 2 தீர்மானங்களில் இருக்கும் உணர்வுகளையும் காங்கிரஸ் கட்சி மதிக்கிறது. அதேநேரத்தில் தனி ஈழம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இப்போது இந்தியாவால் செய்ய இயலாது. பிற நாடுகளுடன் சேர்ந்து, சர்வதேச சட்ட திட்டங்களுக்கு உள்பட்டு இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க முடியும். இந்தியாவே நேரடியாகக் களம் இறங்க முடியாது.
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பதை இந்தியாவால் உடனடியாகச் செய்ய முடியாது. இந்தியாவின் இறக்குமதி - ஏற்றுமதி பெரும்பாலும் இலங்கை வழியாகவே நடைபெறுகிறது. எனவே, பொருளாதார நிபுணர்களைக் கலந்தாலோசித்த பிறகே இந்தியா தீர்க்கமான முடிவுக்கு வர முடியும்.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தமிழகத்தில் மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் விளையாடக் கூடாது. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது.
இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக உள்நோக்கத்துடன் இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாஸம் கருத்துத் தெரிவித்திருந்தால், அவரை நாட்டைவிட்டு வெளியேற்ற மத்திய அரசு தயங்கக் கூடாது என்றார்.
No comments:
Post a Comment