வேளாங்கண்ணியில் புனித வெள்ளி திருச்சிலுவை ஆராதனை
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் புனித வெள்ளி நிகழ்ச்சியாக திருச்சிலுவை ஆராதனை உள்பட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றன.
கீழை நாடுகளின் லூர்து எனப் போற்றப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுதோறும் புனித வெள்ளி நிகழ்ச்சி சிறப்பாகக் கொண்டாடப்படும்.
அந்த வகையில், புனித வெள்ளி நாளான வெள்ளிக்கிழமை மாலை வேளாங்கண்ணி பேராலயத்தில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. முதல் நிகழ்ச்சியாக, இறைவார்த்தை வழிபாடு- பொது மன்றாட்டு நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, திருச்சிலுவை ஆராதனை நடைபெற்றது. இதில், சிலுவையை முத்தி செய்தல், திவ்ய நற்கருணை வழங்குதல், சிலுவைப் பாதை நிறைவேற்றுதல், சிறப்பு மறையுரை ஆகியன நடைபெற்றது.
பின்னர், திருச்சிலுவையில் அறையப்பட்ட இயேசுபிரானின் திருவுடல் சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு, திருத்தலக் கலையரங்கத்திலிருந்து, பேராலய கீழ்க்கோவிலுக்கு பவனியாக கொண்டுச் செல்லப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பேராலயத்தில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. பேராலய அதிபர் ஏ. மைக்கில் தலைமை வகித்து, சிறப்பு வழிபாடுகளை நிறைவேற்றினார். பேராலய துணை அதிபர் ஆரோக்கியதாஸ் மற்றும் உதவிப் பங்குத் தந்தையர்கள் முன்னின்று வழிபாடுகளை நடத்தினர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பாதயாத்திரையாக வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும், புதுவை, கேரளம், ஆந்திரம் உள்பட பல்வேறு வெளி மாநிலங்களைச் சேர்ந்த திரளான பக்தர்களும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment